நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, ரூ.3.99 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக தொடர்புடைய அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது பல இடங்களில் நேற்றும் தொடர்ந்தது.
இந்தநிலையில், சென்னை எழும்பூரில் இருந்து நேற்று (ஏப்ரல் 6) இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் எடுத்துச்செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். இரவு 8.35 மணிக்கு தாம்பரம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோச் எஸ் 7-இல் மூன்று நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த காவல்துறையினர், தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணத்தை எடுத்து வந்தது நவீன், சதீஷ், பெருமாள் என தெரியவந்தது. இவர்கள் மூவரும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர், தேர்தல் செலவுக்காக பணம் எடுத்துச்செல்லப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பணத்தை காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை சித்திரை திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்த இன்று முதல் முன்பதிவு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!