திமுக எம்.எல்.ஏ.மீது ஆக்‌ஷன்: ஸ்டாலினை வலியுறுத்தும் தலைவர்கள்!

அரசியல்

தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய விவகாரத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள டேஜங் மோபார்ட் தனியார் நிறுவன ஊழியர்களை, தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கிருஷ்ணமூர்த்தி மறைமலைநகர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்தல், தனியார் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாம்பரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டுவதை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. காவல்துறை, நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளில் ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வர் நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது. தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொறுப்புமிக்க தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர்‌ எஸ்.ஆர்.ராஜா, தனியார்‌ நில குத்தகை விவகாரத்தில்‌ பஞ்சாயத்து பேசச்‌ சென்றதும்‌, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை மிரட்டுவதும்‌ ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக வழக்குப்‌ பதிவு செய்திருந்தாலும்‌, திமுக எம்‌எல்‌ஏ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

ஆளுங்கட்சியைச்‌ சேர்ந்த மக்கள்‌ பிரதிநிதிகளும்‌, கட்சி நிர்வாகிகளும்‌ அத்துமீறி நடந்துகொள்வதும்‌, மிரட்டல்‌, தாக்குதல்களில்‌ ஈடுபடுவதும்‌ அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்‌. எனவே, இவற்றை‌ தடுத்து நிறுத்துவதில்‌ தமிழக முதல்வர்‌ கவனம்‌ செலுத்துவது அவசியம்‌.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

”95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே?” நேரில் சென்ற எம்.பி.க்கள் அதிர்ச்சி!

செப் -26 ல் அமைச்சரவைக் கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.