Talking about politics over food is barbaric

“உணவை வைத்து அரசியல் பேசுவது காட்டுமிராண்டித்தனம்” : மோடி பேச்சுக்கு எதிர்ப்பு!

அரசியல் இந்தியா

ஆட்டிறைச்சியை சாப்பிட்டு மக்களின் உணர்வை எதிர்கட்சியினர் புண்படுத்திவிட்டதாக கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்த நிலையில் ஜம்முவில் உள்ள உதம்பூரில்  இன்று (ஏப்ரல் 12) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசுகையில், ”புனிதமான சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்தியுள்ளனர்” என்று பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஷ கருத்துக்களை தூவியுள்ளார் மோடி

அமைச்சர் மனோ தங்கராஜ்  வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்! அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம்!

இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்கள் அனைவருக்கும், அவரவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், உணவை உண்ணவும், தொழிலை செய்யவும் முழு உரிமையை வழங்கியிருக்கிறது. ஆனால் பிரதமருக்கு, இந்திய அரசியலமைப்பு சாசனம் என்று சொன்னாலே, பாகிஸ்தான் போன்ற உணர்வு வருகிறது.

மோடி தேர்தல் பிரச்சாரத்தில் “புனிதமான சாவன் மாதத்தில், ஆட்டிறைச்சியை சமைத்துச் சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்துகின்றனர்” எனப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை உண்ணுகிறவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ராமரே காட்டில் மாமிசத்தை தான் சாப்பிட்டதாக புராணங்கள் கூறுகிறது.

அனைத்து மதங்களிலும் மாமிச உணவு உண்பவர்களும், தாவர உணவு உண்பவர்களும் இருக்கிறார்கள். இந்த உண்மையை தெரிந்து வைத்து கொண்டு, காஷ்மீர் பகுதியில் தாவர உணவுகளை உட்கொள்ளும் சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்ட உள்நோக்கத்துடன் விஷ கருத்துக்களை தூவியுள்ளார் பிரதமர்.

இதே போல இடத்திற்கு இடம் மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் ஒரு பிரதமர் பேசுவது மிகவும் ஆபத்தானது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி பேசிய வரலாறு இல்லை, இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு, உலக அரங்கில் இந்திய பிரதமரின் மதிப்பீட்டை தரந்தாழ்த்தும். இவற்றை பார்த்துக்கொண்டு தேர்தல் ஆணையம் மௌனியாய் இருப்பது வெட்கக்கேடு!” என்று மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

பாஜகவின் இந்துத்துவா என்பது…

இதே போன்று சிவகங்கை எம்.பியும், வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சொன்னது போலவே பாஜக  மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள். பாஜகவின் இந்துத்துவா என்பது, மேல்தட்டு வட இந்திய சமஸ்கிருத வெஜிட்டேரியன் இந்துத்துவா; இது முற்றிலும் தென் மாநில கிராமப்புற மக்களின் நம்பிக்கைக்கு வேறானது” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த மார்ச் 31ஆம் தேதி அங்கு நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய போது, கார்த்தி சிதம்பரம் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.

அப்போது அவர், “வரும் தேர்தல், நாடாளுமன்ற வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்டி சாமி கும்பிட தடை போடுவார்கள். நமது பழக்கவழக்கங்களுக்கு தடை போட்டுவிட்டு, சம்ஸ்கிருத, மேல்தட்டு முறைகளில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என கூறுவார்கள்” என்று கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“ஸ்டாலினை தவிர வேறு யாரையும் சகோதரர் என அழைத்ததில்லை” : ராகுல் காந்தி

”இந்த கூட்டம் 100 சதவீதம் வாக்குகளாக மாறும்” : அமித் ஷா நம்பிக்கை!

+1
1
+1
0
+1
0
+1
4
+1
1
+1
1
+1
0

1 thought on ““உணவை வைத்து அரசியல் பேசுவது காட்டுமிராண்டித்தனம்” : மோடி பேச்சுக்கு எதிர்ப்பு!

  1. நாங்க மறுபடியும் ஜெயிச்சு வந்தா என்ன செய்யப் போறோம்னு இப்பவே சின்ராசு சொல்லிட்டாப்ல, அதாவது முதல் வேலையா, கடாவெட்டுறது, கறி சமைக்கறது இது எல்லாத்தையும் தடை செய்யப் போறாய்ங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *