ஓபிஎஸ் பற்றி பேசினால் நேரம் வீண்: ஈபிஎஸ்

அரசியல்

நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 20) அங்கீகரித்து கடிதம் அனுப்பியது. கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவும் உத்தரவிட்டது. எனினும் இந்த முடிவு நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கர்நாடக தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவைப் பொறுத்தவரை இனி பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படும். எம். ஜி. ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக இனி பீடு நடை போடும்.

ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக கழக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

எனக்கு என்றும் துணை நிற்கிற பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் அவர், “நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிறோம். ஒன்றரை கோடி தொண்டர்கள் இன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இனி எங்கள் பணியே வேறு. மற்றவர்களை (ஓ. பி. எஸ் தரப்பு) பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையாக இந்த கட்சியை நேசிக்கிறவர்களை, மீண்டும் எம். ஜி. ஆர், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்று நினைக்கிறவர்களை ஒரு சிலரைத் தவிர்த்து கட்சியில் இணைத்துக்கொள்வோம்.

ஏற்கனவே கழகத்தின் செயல்பாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. இப்போது பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு பூத்துக்கும் மகளிர் அணியை உருவாக்கும் பணியை துவங்க இருக்கிறோம். இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை நான் சாதாரண தொண்டன் தான். தொண்டர்கள் அனைவரும் பொதுச்செயலாளராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கட்சிக்கு ஒரு தலைமை தேவை.

கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் முடிவெடுத்து இந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறார்கள்” என்றார்.

பிரியா

பல்வீர் சிங் வழக்கு: சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!

சிண்டிகேட் உறுப்பினர்: ராஜினாமா செய்தார் உதயநிதி

Talking about OPS is a waste of time
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *