மிமிக்ரி சர்ச்சையில் சாதி சர்ச்சையை கிளப்பிய ஜெகதீப் தங்கார்

Published On:

| By Kavi

MP Kalyan Banerjee's mimicry on Jagdeep Dhangar

MP Kalyan Banerjee’s mimicry on Jagdeep Dhangar

நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பேனர்ஜி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கார் போல் மிமிக்ரி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஜெகதீப் தங்காருக்கு போன் செய்து பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மிமிக்ரி செய்த எம்.பி

இவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பேனர்ஜி, குடியரசுத் துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தங்கார் போல் மிமிக்ரி செய்தார்.

முதுகை வளைத்து குனிந்து நின்றபடி  நடித்து காட்டினார். இதனை சக எம்.பி.க்கள் ரசித்து பார்த்து கைத்தட்டி சிரிக்க, ராகுல் காந்தி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

கல்யாண் பேனர்ஜி மிமிக்ரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்துக்கு உள்ளானது.

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருந்த பாஜக, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு இதுபோன்ற செயல்கள் தான் காரணம் என்று விமர்சித்திருந்தது.

எம்.பி கல்யாண் பேனர்ஜியின் செயலால் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கார் கடும் அதிருப்தியில் உள்ளார். அவரை பிரதமர் மோடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் ஆறுதல்

இதுகுறித்து ஜெகதீப் தங்கார் எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி என்னை தொடர்புகொண்டு பேசினார். புனிதமான நாடாளுமன்ற வளாகத்தில் சில எம்.பி.க்களின் இதுபோன்ற கேவலமான செயல்கள் மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக தானும் இதுபோன்ற அவமானங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால் குடியரசு துணை தலைவர் போன்ற அரசியலமைப்பு அதிகாரத்தில் இருப்பவர் மீது, அதுவும் நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடப்பது துரதிர்ஷ்டவசமானது என கூறினார்.

நான் அவரிடம், ஒரு சிலரின் கோமாளித்தனமாக செயல்கள் எனது கடமையை செய்வதிலிருந்தும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நிலைநிறுத்துவதிலிருந்தும் என்னை தடுக்காது. எந்த அவமானமும் என் பாதையை மாற்றாது என்று கூறினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மனம் நொந்து போனேன் – குடியரசுத் தலைவர்

குடியரசுத் துணை தலைவரை போன்று மிமிக்ரி செய்த வீடியோவை பார்த்து மனம் நொந்து போனதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். அது கண்ணியமாகவும், மரியாதையாகவும் இருக்க வேண்டும். அதுதான் நம் நாடாளுமன்றத்தின் பாரம்பரியம். அதை எம்.பி.க்கள் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கூறியுள்ளார்.

அவையில் வேதனைப்பட்ட ஜெகதீப் தங்கார்

இந்தசூழலில் இன்று காலை மாநிலங்களவை கூடியது. காலை 11.45 மணியளவில், நேற்று நடந்த சம்பவம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார் ஜெகதீப் தங்கார். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோரிடம் இதுபற்றி சிந்திக்குமாறு கூறினார்.

“தனிப்பட்ட ஜெகதீப் தங்காரை அவமானப்படுத்தினால் அது எனக்கு கவலை இல்லை. ஆனால் இந்திய துணை குடியரசுத் தலைவரை, விவசாயிகள் சமூகத்தை, என் சமூகத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த சபையின் கண்ணியத்தைக் காப்பது எனது கடமை” என்று எம்.பி.க்களிடம் கூறினார் ஜெகதீப் தங்கார்.

காங்கிரஸ் கேள்வி

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  “சாதியின் பெயரால் வெளியில் உள்ளவர்களைத் தூண்டிவிட்டு உள்ளேயே பேசிக் கொண்டிருக்கக் கூடாது மாநிலங்களவையில் என்னை அதிகம் பேச அனுமதிப்பதில்லை. நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்னை பேச அனுமதிக்கவில்லை  என்று நான் சொல்லட்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி,  “மிமிக்ரி என்பது ஒரு கலை. இந்த மிமிக்ரி ஜெகதீப் தங்காரை சித்தரித்தது என யாரும் சொல்லவில்லை. அரசியல் சாசனப் பதவிகளில் இருப்பவர்  சாதிகளைப் பற்றிப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானதா?. இதுபோன்ற விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு,  நாடாளுமன்ற பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை அரசு மறைக்க முயல்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். 

ஜெகதீப் தங்காருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அதேசமயம் மிமிக்ரி விவகாரம் பேசுபொருளாகியிருப்பது குறித்து பேசியஅவர்,  “நான் அவரை வீடியோ எடுத்தேன். அந்த வீடியோ என மொபைலில் உள்ளது. 150 எம்.பி.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதானி, ரஃபேல், வேலைவாய்ப்பின்மை பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் இந்த மிமிக்ரி விவகாரம் குறித்து பேசுகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மம்தா ரியாக்‌ஷன்

தனது கட்சி எம்.பி மிமிக்ரி செய்தது பற்றி பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, “அவர் அவமரியாதை செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. நாங்கள் எல்லோரையும் மதிக்கிறோம். இது அரசியலோ அல்லது சாதாரணமானதோ, ராகுல் இதைப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்காது” என்று பதிலளித்துள்ளார்.

கல்யாண் பேனர்ஜி பதில்!

“ஒருவரைப்போல் நடித்து மிமிக்ரி செய்வது என்பது ஒரு கலை. எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை. அவைத் தலைவரை நான் பெரிதும் மதிக்கிறேன். மக்களவையில் 2014- 2019 வரை பிரதமர் மோடியே எதிர்கட்சியினரை கிண்டல் செய்து நடித்துக் காட்டியிருக்கிறார்” என்று தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார் மிமிக்ரி செய்த எம்.பி. கல்யாண் பேனர்ஜி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 2!

2023-ல் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ!

MP Kalyan Banerjee’s mimicry on Jagdeep Dhangar

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share