மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

Published On:

| By Monisha

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 22) ஆஜராகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார்.

அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன. தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணப் பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து மு.க. அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று (பிப்ரவரி 22) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர்.

இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

மோனிஷா

இலவச திருமண திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு!

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel