நடிகர் டி. ராஜேந்தரின் லட்சியத் திமுக செயல்படாத கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
253 செயல்படாத கட்சிகள்
தமிழ்நாடு, பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் 253 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீசுக்கு பதில் அளிக்காதது 2014, 2019 ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாதது ஆகிய காரணங்களால் இவை செயல்படாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அதன்படி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு கட்சிக்குத் தேர்தல் ஆணையத்தின் மீது மாறுபட்ட கருத்து இருப்பின், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையத்தை உரிய ஆதாரங்களுடன் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ராஜேந்தரின் லட்சிய திமுக!
நடிகர் டி.ராஜேந்தரின் ‘லட்சிய திராவிட முன்னேற்றக் கழகமும்’ செயல்படாத கட்சி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சினிமாவில் 80களில் கொடிகட்டிப் பறந்த டி.ராஜேந்தர் திமுக மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர் திமுகவிலிருந்து விலகி 1991ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அக்கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

1996ஆம் ஆண்டு பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு திமுக ஆட்சியில் எம்.எல்.ஏ ஆனார். மீண்டும் திமுகவிலிருந்து விலகிய டி.ராஜேந்தர் 2004 ஆம் ஆண்டு லட்சிய திமுக என்ற கட்சியைத் தொடங்கிச் செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து 2013ல் மீண்டும் திமுகவில் இணைந்தார். அப்போது கலைஞர் வெளியிட்ட அறிக்கையில், “திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கட்சியின் வளர்ச்சி பணிக்காகச் செயல்பட்டவர் டி.ராஜேந்தர்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் திமுகவிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது என் அழைப்பை ஏற்று மீண்டும் கட்சியில் இணைந்ததை வரவேற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை என்று 2021 மார்ச் 27ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார் டி.ராஜேந்தர்.
அதைத்தொடர்ந்து சினிமா மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
தற்போது அவரது கட்சி செயல்படாத கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விரைவில் நல்ல செய்தி!
இந்நிலையில், தனது மகன் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள டி.ராஜேந்தர், “உடல் நலக் குறைவால் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் நல்ல செய்தியோடு, தலைப்பு செய்தியோடு, இனிப்பு செய்தியோடு வருவேன்” என்று கூறியுள்ளார்.
பிரியா
டி.ராஜேந்தரிடம் நேரில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்