கண்கள் கட்டப்படாத, வாளுக்கு பதிலாக கையில் அரசியலமைப்பு புத்தகம் ஏந்தி நிற்கும் புதிய நீதி தேவதை சிலை உச்சநீதிமன்றத்தில் நேற்று (அக்டோபர் 16) திறக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய நீதி தேவதையின் சிலையானது வலது கையில் தராசும், இடது கையில் வாளும் ஏந்தியபடி, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையும், பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது என்பது அதன் குறியீடாக கருதப்பட்டு வந்தது.
இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான நூலகத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தலின்படி கண்கள் கட்டப்படாத, வாளுக்கு பதில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி நிற்கும் புதிய நீதி தேவதை சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது, இந்தியா காலனித்துவ காலத்திலிருந்து வெளியேறுவதைப் பிரதிபலிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியச் சட்டம் பார்வையற்றது அல்ல, ஆனால் அனைவரையும் சமமாகப் பார்ப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதியை உறுதி செய்யும் என்பதை கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதை சிலை உணர்த்துகிறது.
இதனை குறிப்பிட்டு, “சட்டம் குருடானது அல்ல; அனைவரையும் சமமாகப் பார்க்கிறது” என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் “ஆங்கிலேய ஆட்சிமுறையில் வாள் என்பது தண்டனை மற்றும் அதிகாரத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் அது வன்முறையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. ஆனால் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன. இந்த கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் கையில் அரசியலமைப்பு புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது என புதிய நீதி தேவதை குறித்து தலைமை நீதிபதி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா என சட்ட அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய நீதி தேவதை அமைக்கப்பட்டுள்ளது இந்தியா தனது பாரம்பரிய சிந்தனைகளுடன் சட்ட கட்டமைப்பை நவீனமயமாக்க முயற்சித்து வருவதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பூர்விகா உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று கனமழை பெய்யுமா?