-ரவிக்குமார்
தமிழ்நாட்டில் ஆதிதிராவிட சமூகத்தில் தோன்றி நாடு போற்றும் நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சுவாமி சகஜாநந்தா ஆவார். தமிழறிஞராக, இதழாளராக, சமயத் தலைவராக, அரசியல் தலைவராக – இப்படி பல பரிமாணங்கள் கொண்டவராக விளங்கிப் புகழ்பெற்றவர் அவர்.
ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதியினருக்கு 1890 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தா.
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி என்பதாகும். அவர் தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியை பயின்றார். அதன் பிறகு உயர்நிலைக் கல்விக்காக திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகாமணி என்று பெயர் சூட்டப்பட்டது.
பிழைப்பு தேடி அவரது பெற்றோர்கள் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அவரும் அங்கே சென்றார். அங்கு ஏற்பட்ட தொடர்புகளின் காரணமாக அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டது. தனது 17ஆவது வயதில் தான் ஒரு சன்னியாசி ஆகப்போவதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு, அவர்களை விட்டு வெளியேறினார்.
பல்வேறு ஊர்களிலும் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளைச் சந்தித்து அவர்களிடம் சமயம் சம்பந்தமான கல்வியைப் பெற்றார். யோகி நீலமேக சுவாமிகள், தட்சணா சுவாமிகள், கைலாச சுவாமிகள், சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகள் முதலானோர் அதில் முக்கியமானவர்கள்.
சிதம்பரத்துக்கு அவர் எப்படி வந்தார் என்பதை சகஜாநந்தாவே குறிப்பிட்டிருக்கிறார்.’ திரு.அ. முருகேசம் பிள்ளை அவர்கள் 1910 ஆம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் தரிசனத்திற்கு தம்மோடு அடியேனையும் அழைத்துக்கொண்டு சென்று சிதம்பரத்தில் எம் குல மணியாகிய திருநாளைப்போவார் தீயில் மூழ்கிய ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியவர்களும் பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறு கட்டிடமாகிய சத்திரத்திற்கு அழைத்துக் கொண்டுபோய்க் காண்பித்து ஈண்டிருந்து ஏழைப் பஞ்சமர்கட்கு நன்மை செய்வது நலமெனத் தெரிவித்தார்கள்” என அதை சகஜாநந்தா விவரித்திருக்கிறார்.
சிதம்பரத்துக்கு வந்த சுவாமி சகஜாநந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பினார். அங்கிருந்த ஆன்மீகவாதிகளையும், வள்ளலாரின் வழியை ஏற்றுக்கொண்டிருந்த சில சன்னியாசிகளையும் அணுகித் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
பெரியபுராணத்தாலும், அதன் பின்னர் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனையாலும் பிரபலப்படுத்தப்பட்டிருந்த நந்தன் கதையின் தாக்கத்தினால், நந்தனின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவெடுத்து 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி நந்தனார் கல்விக்கழகம் என்பதை நிறுவினார்.
இதனிடையே அவருக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் சைவ சமய பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் அவருக்கு உலகமெங்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச்சாலைக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.
27 வயதில் சிறப்பு பாயிரம்
சுவாமி சகஜாநந்தா அவர்கள் ஒரு ஆன்மீக வாதி மட்டுமல்லாமல் தமிழில் புலமை பெற்ற தமிழறிஞராகவும் திகழ்ந்தவர். சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் அவர் சமஸ்கிருதத்தை பயின்றதாகத் தெரிகிறது. வ.உ.சிதம்பரனார் எழுதிய மெய்யறம் என்ற நூலுக்கு சுவாமி சகஜாநந்தா சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்.
” இதற்குச் சிறப்பு பாயிரம் தந்தவர்கள் கல்வி கேள்வி ஒழுக்கங்களால் நிறைந்து மெய்யந்தணராய் விளங்கா நின்ற ஸ்ரீ சகஜாநந்த சுவாமி அவர்கள்” என வ உ சி அந்நூலில் எழுதியுள்ள தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
“மெய்யற இயற்றினோன் வையமோர் சிதம்பரம்
வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல்லையாம்
மடியரும் கேட்கவோ ரடியால் யாத்தனன்
நுதலிய தறவழி முதனிலை யடைதல்
அறம்பொரு ளின்பம்வீ டடைதல் பயனே
விரோதி கிருதுவில் விளம்பப் பெற்றது
கண்ணனூ ரரண்மனை யெண்ணியாத் திடுகளம்.
ஆன்றமா தேவ னகமரங் கேற்றிடம்.
ஏழையுங் கற்குமா றியற்றப்பட்டது
மெய்யற மென்றும் வையகத் துலாவுக”
இந்த நூலுக்கு சிறப்புப் பாயிரம் எழுதியபோது சுவாமி சகஜாநந்தா அவர்களுக்கு 27 வயது தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். இது அவரது தமிழ்ப் புலமையையும், அதற்கு இருந்த அங்கீகாரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
ஆன்மீகவாதியாக இருந்தாலும் அரசியலில், சுவாமி சகஜாநந்தாவுக்குத் தெளிவான பார்வை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும், காந்தியடிகளின் பிடிவாதத்தால் பூனா ஒப்பந்தத்தின் மூலமாக பறிக்கப்பட்டபோது அம்பேத்கருக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் சுவாமி சகஜாநந்தா.
ஆதிதிராவிட மக்கள் எல்லா நிலைகளிலும் தமக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்று விடாமல் வலியுறுத்தியவர் அவர். கோயில்களில், தேவஸ்தான கமிட்டிகளில் ஆதிதிராவிடர்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். திருப்பதி தேவஸ்தானத்தில் அப்படி ஒருவரையாவது நியமியுங்கள் என்று வலியுறுத்தினார்.
கோயில்களை அனைவருக்கும் திறந்து விடுவதாக அரசாங்கம் செய்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை என்பதை அவர் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். ‘‘ஆலயப் பிரவேச சட்டம் பெரிய ஆலயங்களில் அமுலுக்கு வந்துள்ளது. சிறிய கோயில்கள் மூடியே கிடக்கின்றன. சீர்காழி தாலுகாவில் திருநகரி, திருவாலி முதலான இடங்களில் திறந்த ஒரு நாள் தவிர மறுநாள் முதல் ஹரிஜனங்களை வரவேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். சட்டம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் கனம் ஸ்பீக்கர் அவர்கள் தான் பல கோவில்களைத் திறந்து விட்டிருக்கிறார். அவைகளிலும் இப்பொது ஹரிஜனங்களை அனுமதிக்கவில்லை. திறந்துவிட்ட திருநகரி, திருவாலி கோவில்களில் இவ்வாண்டு தை அமாவாசையில் நடக்க வேண்டிய 12 கருடசேவையை நிறுத்தி விட்டார்கள். சட்டத்தை இயற்றியும் பலனை அனுபவிக்க முடியாமலிருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
ஆரியர்களின் சூழ்ச்சி
1938 ஆம் ஆண்டு ஆலயங்களை அனைவருக்கும் திறந்துவிடுவதற்கான சட்ட மசோதா சென்னை மாகாண சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதன்மீது பேசிய சகஜாநந்தா, “ஹரி ஜனங்கள் ஆலயங்களுக்குள் போகக் கூடாதென்று எந்த வேதமும், சாஸ்திரமும் சொல்லவில்லை. சில மடாதிபதிகள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். சிருங்கேரி சங்கராச்சாரியார், கும்பகோணம் சங்கராச்சாரியார், வானமாமலை ஜீயர் சுவாமிகள் எல்லாம் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள்.” என்று சாடியிருக்கிறார்.
அத்துடன், ஆதிதிராவிட மக்கள் தாழ்த்தப்பட்டதற்கு ஆரியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதையும் தனது உரையில் பதிவு செய்திருக்கிறார், “சாஸ்திர முறையில் ஒருவர் யாரை தொடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறதென்றால் சண்டாளனை தொடக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. ஜன்ம சண்டாளன், கன்ம சண்டாளன் என்று இரண்டுவகை உண்டு. ஹரிஜனங்கள் இரண்டுமல்ல. இன்றைக்கு ஜர்மானியர் யூதர்களை எவ்வாறு துரத்தித் தொந்திரவு பண்ணுகிறார்களோ, அலைக்கிறார்களோ, அதே மாதிரி இந்த இந்தியாவில் ஆரியர் குடியேறிய காலத்தில் இந்தியாவில் உள்ளவர்களைத் தாழ்த்தவேண்டுமென்று சொல்லி அவர்கள் மேற்படி ஸ்தானத்தை ஏற்றினார்களே தவிர ஹரிஜனங்கள் தாழ்ந் தவர்களல்ல.” என்று உறுதியாகப் பேசியிருக்கிறார்.
இந்தியாவிலிருக்கும் எஸ்.சி சமூகத்தவரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட்டில் அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்கிற ‘எஸ்சி துணைத் திட்டம்‘ பற்றி இப்போதுதான் நாம் பேசுகிறோம். ஆனால் அதை சுவாமி சகஜாநந்தா அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளார்.
’நம் மாகாணத்தில் ஹரிஜனங்கள் ஐந்தில் ஒரு பங்கு இருக்கிறார்கள். ஆகையால் மாகாண வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஏழைகளுக்கு செய்ய வேண்டியது அவசியம். 55 கோடி வருமானம் வந்தால் 11 கோடி ஒதுக்க வேண்டும். இதில் லேபர் டிபார்ட்மெண்டுக்கு ஒரு கோடி ஒதுக்கிவிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஏழைகளுக்கு நிலங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படி 30 வருஷம் செய்தால் ஏழைகள் நில சுவாந்தார்களாவார்கள்’என்று அவர் வற்புறுத்தியிருப்பது இதற்கொரு சான்றாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு செய்யப்பட்ட வன்கொடுமையைக் கண்டித்து தமிழ்நாட்டிலிருக்கும் பெரிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பேசாமல் இருக்கின்ற நிலையைப் பார்க்கிறோம். அப்படிப் பேசினால் சாதி இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.
1952 இல் ஆதிதிராவிட மக்களுக்கான பள்ளிகள், விடுதிகள் கட்ட போதுமான நிதியை அன்றைக்கிருந்த ராஜாஜி தலைமையிலான அரசாங்கம் ஒதுக்காததைக் கண்டித்த சகஜாநந்தா, ஆதிதிராவிட மக்களின் வாக்குகளை வாங்கித்தான் அனைவருமே உறுப்பினர்கள் ஆகியிருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார். ”காங்கிரஸ் பார்ட்டியில் சுமார் 32 ஹரிஜனங்கள் வந்திருக்கிறார்கள். ஹரிஜனங்களில் வோட்டில் தான் பெரும்பாலோரும் வந்தோம். இதில் தமிழ் நாட்டிலிருந்து 26 பேர்கள் வந்திருக்கிறோம். மேலும் காங்கிரஸ் பார்ட்டியில் 152 மெம்பர்கள் வந்துள்ளார்கள். இவர்களெல்லோரும் ஹரிஜனங்களின் வோட்டுகள் பெற்றே வந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.
மாகாணத்தில் சராசரி ஒரு கிராமத்தில் 100 வோட்டுகளிருக்குமானால் ஹரிஜனங்களுக்கு 36 வோட்டுகளும், படையாச்சிகள் இதர முன்னேற்றம் பெறாதவர்களுக்கு 26 வோட்டுகளும், பிராமணர் முதலாக பிள்ளை, ரெட்டி, முதலி, கவுண்டர் முதலான எல்லா ஜாதிகளுக்கும் சேர்ந்து 38 வோட்டுகளும் உள்ளன. இதில் தனிப்பட்ட சமூகத்தவர்கள் தங்கள் சமூக வோட்டால் வர முடியாது. ஹரிஜனங்களின் வோட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் கட்டாயம், திட்டமாக ஜெயிப்பார்கள். ஆகையால் 152 பேரும் ஹரிஜனங்களின் வோட்டைப் பெற்றே ஜெயித்தார்கள். இந்த உண்மையை மறக்க வேண்டாம்” என எச்சரித்தார்.
இன்று சுவாமி சகஜாநந்தாவை சனாதனிகள் கையகப்படுத்தப் பார்க்கிறார்கள். சமத்துவத்தை முன்வைத்த அவரது ஆன்மீகத்தை, சாதிய ஏற்றத்தாழ்வைப் போற்றும் இந்துத்துவ அரசியலுக்குள் அடக்கப் பார்க்கிறார்கள். அது நெருப்பைப் பொட்டலம் கட்டுவதற்கு செய்யும் முயற்சியை ஒத்ததாகும். ஆதிதிராவிட மக்களின் தனித்துவத்தை வலியுறுத்தி, அவர்களது முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சமத்துவ சிந்தனையாளர் அவர். சாதிவாத, மதவாத சனாதனிகள் அவரை அரசியல் நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியை முறியடிப்பதும், சுவாமி சகஜாநந்தாவின் சமத்துவ அரசியலை முன்னெடுப்பதும் சனநாயக சக்திகள் அனைவரது கடமையாகும்.
அரோகரா… அரோகரா… : 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் குடமுழுக்கு!
முக்கால் மணி நேரம் விமானத்திலேயே வட்டமடித்த தமிழிசை