முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 11) நிறுத்தி வைத்துள்ளது.
உயர்க் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.பதவியை இழந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு வந்த சமயத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறைக் காலம் என்பதால், உடனடியாக பொன்முடியால் மேல்முறையீடு செய்யமுடியவில்லை.
விடுமுறைக்குப் பின் கடந்த ஜனவரி 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் பொன்முடி.
இம்மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்ய கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இவ்வழக்கு கடந்த மார்ச் 4ஆம் தேதி நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொன்முடி தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதைத்தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி, பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலோடு திருக்கோவிலூர் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளி என தீர்ப்பு அளித்ததை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரி பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் மார்ச் 18அம் தேதிக்கு பதில் மார்ச் 11ஆம் தேதி இவ்வழக்கை விசாரிப்பதாக தேதியை மாற்றி அறிவித்தது.
அதன்படி இன்று (மார்ச் 11) வழக்கு விசாரணைக்கு வந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான 3 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
பொன்முடி ஜாமீன் பெறுவதற்கு சிறப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“புதிய சட்டத்தின் படி கூடவே கூடாது” : தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு!
தேர்தல் பத்திரங்கள்.. எஸ்பிஐ வங்கிக்கு கெடு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Atlee -யின் ‘அசுரவளர்ச்சி’… அடுத்த படத்திற்கு வாங்கப்போற ‘சம்பளம்’ இவ்வளவா?