திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மார்ச் 11 ஆம் தேதி முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வழி ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அப்போதைய அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவித்தார். டிசம்பர் 21-ஆம் தேதி அவர்களுக்கு மூன்று வருட தண்டனை என்றும் அறிவித்தார்.
இதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பொன்முடி வகித்து வந்த திருக்கோவலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி.
கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து கீழ் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தது.
மனைவியின் சொத்துகளும் பொன்முடியின் சொத்துகளா?
தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் மார்ச் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் அவர் குற்றவாளி என்பதையும் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்காக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜரானார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் ஆஜரானார்.
பொன்முடி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தங்களை உயர்நீதிமன்றம் தவறான முறையில் தண்டித்திருக்கிறது. பொன்முடியின் சொத்துகளையும், அவரது மனைவியின் சொத்துகளையும் உயர் நீதிமன்றம் ஒரே வகையில் பார்த்ததில் தவறு செய்திருக்கிறது.
விசாலாட்சி ஒரு பொது ஊழியர் அல்ல. அவர் வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலமாக பொருள் ஈட்டுகிறார், வருமான வரி கட்டுகிறார். விசாலாட்சியுடைய வருமானமும், சொத்துகளும் பொன்முடியின் சொத்துகளை விட, வருமானத்தை விட அதிகம். இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் செக் பீரியடாக குறிப்பிடப்படுகிற காலத்துக்கு முன்பே இதுதான் நிலவரம்.
இந்த நிலையில், பொது ஊழியராக இருப்பவருடைய வருமானத்தையும் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்கின்ற வணிக நிறுவனங்களை நடத்துகிற அவருடைய மனைவியுடைய சொத்துக்களையும் ஒன்றாகப் பார்ப்பது சட்டத்தின் படி அனுமதிக்க முடியாதது. இந்த அடிப்படையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர்.
conviction மற்றும் sentence… உச்ச நீதிமன்ற உத்தரவு!
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் பயான் ஆகியோர்… சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற தீர்ப்பையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
பொன்முடியைப் பொறுத்தவரை அவரது conviction மற்றும் sentence ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அதாவது conviction என்பது குற்றவியல் விசாரணையின் முடிவைக் குறிக்கிறது. இது ஒரு நபரை ஒரு குற்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கும் அல்லது அறிவிக்கும் செயலாகும். மறுபுறம், sentence என்பது ஒரு குற்றத்திற்காக குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன என்பதாகும். தண்டனை என்பது குற்றவாளி என்ற தீர்ப்பின் விளைவாகும்.
பொன்முடிக்கான உத்தரவு விசாலாட்சிக்கு பொருந்தாது!
இந்த வகையில் பொன்முடிக்கு அவர் குற்றவாளி என்ற தீர்ப்பு, தண்டனை இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது மனைவி விசாலாட்சிக்கு தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் உத்தரவுக்குப் பின் விசாலாட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா,
விசாலாட்சி மீதான conviction இடைநீக்கம் செய்யப்படுகிறதா என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டார்.
அதற்கு நீதிபதி ஓகா, “அவர் பொது ஊழியரா?’” என்று கேட்டார்.
வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “இப்போது இல்லை. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி ஓகா, “அவர் பொது ஊழியராக இல்லாத நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட sentence தண்டனை மட்டும்தான் நிறுத்தி வைக்கப்படுகிறது. அவரது conviction நிறுத்தி வைக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்.
குழப்பத்துக்கான காரணம்!
முன்னதாக, இந்த உத்தரவு பற்றி ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளில்… பொன்முடி மீதான conviction அதாவது குற்றத்தை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரது மேல் முறையீடுகளும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் விசாலாட்சிக்கு நீதிமன்றம் தெரிவித்த பதிலை பொன்முடிக்கானதாகவும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு அப்படி ஒரு தகவல் வெளியானது.
ஆனால், பொன்முடிக்கு conviction, sentence ஆகிய இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது மனைவி விசாலாட்சியின் sentence மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான சட்ட ரீதியான வழி ஏற்பட்டுள்ளது.
இது இடைக்கால உத்தரவுதான் என்பதால், உயர் நீதிமன்ற அடிப்படை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த உத்தரவு ஊழல் தடுப்பு வழக்குகளில் ( prevention of corruption cases) முக்கியமான முன்னோடித் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இனி இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதிகளும் இப்படி தண்டிக்கப்படும் நிலையில், பொன்முடி வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டு வாதாடும் அளவுக்கு இந்த உத்தரவு அமைந்துள்ளது என்கிறார்கள் உச்ச நீதிமன்ற சட்ட வட்டாரங்களில்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!
சாலைகளில் சட்டவிரோத கொடிக்கம்பங்கள்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!