மக்களவை கூட்டத்தொடரில் அவையை நடத்தவிடாமல் முழக்கமிட்ட 4 காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இன்று (ஜூலை 25) காலை தொடங்கிய மக்களவை கூட்டத்தொடரில், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் அவையை நடத்தவிடாமல் முழக்கமிட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர், கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.பிரதாபன் ஆகியோர் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவைத்தலைவர் ஓம் பிர்லா முன்பு நின்று, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 3 மணிக்கு மேல் இதுகுறித்து விவாதிக்கலாம் என அவைத் தலைவர் தெரிவித்தும், அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து அவைத் தலைவர், அந்த 4 காங்கிரஸ் எம்பிக்களையும் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்பிக்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்