மக்களவையில் மழைக் கால கூட்டத் தொடர் முழுதும் இடை நீக்கம் செய்யப்பட்ட 4 காங்கிரஸ் எம்பிக்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் மக்களவைக்குச் சென்றனர்.
ஜூலை 25ம் தேதி காலை தொடங்கிய மக்களவை கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர், கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.பிரதாபன் ஆகியோர் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவைத்தலைவர் ஓம் பிர்லா முன்பு நின்று, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். அன்றைய தினம், பிற்பகல் 3 மணிக்கு மேல் இதுகுறித்து விவாதிக்கலாம் என அவைத் தலைவர் தெரிவித்தும், அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவைத் தலைவர், அந்த 4 காங்கிரஸ் எம்பிக்களையும் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்பிக்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், இதுதொடர்பாக கேள்விகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் 2 மணிக்கு கூடிய மக்களவையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி, ‘காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அவர், சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், இனி, அவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அதிர் ரஞ்சன் செளத்ரி உடன் மக்களவைக்கு சென்றனர்.
ஜெ.பிரகாஷ்