12  மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை நேரம் என்ற சட்டத் திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்  இன்று (ஏப்ரல் 24) அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

மே தினத்தின் நூற்றாண்டை கொண்டாட இருக்கும் வேலையில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்து முதலாளிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் இந்த சட்ட திருத்தம் கண்டிக்கத்தக்கது என்று கூறி திமுகவின் கூட்டணி கட்சியினரே வெளிநடப்பு செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டத்திலும் இறங்கினார்கள்.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் சிஐடியு, ஏஐடியுசி, உட்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பெரும்பாலான தொழிற்சங்கத்தினர் இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முதலமைச்சரிடம் பேசி நல்ல முடிவை தெரிவிக்கிறோம் என்று அமைச்சர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம் தெரிவித்தார்கள்.

இந்தப் பின்னணியில் ஆலோசனைக் கூட்டம் நடந்த சில மணி நேரங்களில் இந்த சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், “பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது பல்வேறு தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சிகள் கருத்துகளை தெரிவித்தனர். தொழிற்சாலைகள் சட்டத் திருத்தம் குறித்து இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது தொழிற்சங்கத்தினர் தெரிவித்த கருத்துகளை ஏற்று தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன் வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்கவுமே  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொழில் முன்னேற்றத்தை பெருக்கும் அதே நேரம் தொழிலாளர்கள் நலனைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும்.   திமுக அரசு என்றும் தொழிலாளர்களின் தோழனாக விளங்கும்” என்று இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு திமுக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்ட  கட்சிகளின் போராட்டத்துக்கும் கண்டனத்துக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

வேந்தன்

ஓபிஎஸ் மேல்முறையீடு: ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாஜக பூஜ்யமாக வேண்டும்: நிதிஷ் சந்திப்புக்கு பின் பேசிய மம்தா

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts