டிஜிட்டல் திண்ணை:  சூர்யா-டெய்சி 19 நிமிட ஆடியோ: பாஜக விசாரணையில் வெளிவந்த பகீர்!

அரசியல்

வைஃபை ஆன் செய்யப்பட்டதும் பாஜகவில் வீசும் ஆடியோ புயல் பற்றிய சில கேள்விகள் மெசஞ்சரில் வந்திருந்தன.  

‘பாஜக நிர்வாகிகள் திருச்சி சூர்யா -டெய்சி  இடையே நடந்த உரையாடல் பற்றி வெளியான ஆடியோ முழுமையானதுதானா? இது பற்றி திருப்பூர் பாஜக அலுவலகத்தில் நடந்த விசாரணை விவரங்கள் பெரிதும் வெளிவரவில்லையே?,

விசாரணை முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சூர்யாவும் டெய்சியும் நாங்கள் அக்கா தம்பியாக தொடர்கிறோம் என்று கூறியது தான் பெரிதாக பேசப்பட்டதை தவிர அந்த விசாரணையில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லையே?”

என்பன போன்ற கேள்விகள் மெசஞ்சரில் வந்து விழுந்தன.

அவற்றுக்கு பதில் அளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“பாஜக ஓபிசி மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கும் திருச்சி சூர்யாவிற்கும் சிறுபான்மை அணி மாநில தலைவியான டெய்சிக்கும் இடையே கடந்த மாதம் நடந்த ஆடியோ உரையாடல் தான் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களை எந்த அளவுக்கு பாஜக நிர்வாகிகள் ’மதிக்கிறார்கள்’ என்பதற்கு உதாரணமாக இந்த ஆடியோ இருக்கிறது என்று பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

அதன்படி பாஜக மாநிலத் துணைத் தலைவர் பொன் கனகசபாபதி உள்ளிட்ட விசாரணை குழுவினர் திருப்பூரில் ஆடியோ சம்பந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையை சென்னை கமலாலயத்தில் நடத்தினால் அனைத்து ஊடகங்களும் திரண்டு லைவ் செய்து  பிரச்சனையை மீண்டும் பெரிதாக்கி விடுவார்கள் என்பதற்காகத்தான் திருப்பூர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார் அண்ணாமலை. ஆனால் தகவல் தெரிந்து திருப்பூர் ஊடகத்தினர் அங்கே திரண்டு விட்டனர்.

விசாரணைக்காக டெய்சியும் சூர்யாவும் ஆஜரானார்கள்.  விசாரணை குழுவினரிடம்  பேசிய சூர்யா  ‘இப்போது வெளியாகி இருக்கிற ஆடியோ சுமார் மூன்று நிமிடங்கள் தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் பேசியது 19 நிமிடங்கள். அந்த 19 நிமிடங்களில் நான் பேசியதற்கு இணையாக டெய்சியும் என்னை பற்றி தவறாக பேசியிருக்கிறார்.

அண்ணாமலைஜியோடு என் குடும்பத்தைத் தொடர்புபடுத்தி டெய்சி அபாண்டமாக பேசினார். ஆனால் அது பற்றிய உரையாடல்கள் திட்டமிட்டு கட் செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டு இந்த ஆடியோ லீக் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிகாலை 6:20 மணிக்கு நான் இவ்வாறு ஆவேசமாக பேசியதாக டெய்சி கூறுகிறார். அன்று அதிகாலை நான்கு மணியிலிருந்து அவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ்கள் மிக மிக கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்டிருந்தன’ என்று கூறிய சூரியா அந்த வாய்ஸ் மெசேஜுகளையும் விசாரணைக் குழுவினரிடம் கொடுத்தார்.

மேலும்,  ‘அதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக தான் நான் காலை 6.20  மணிக்கு அவருக்கு போன் செய்து அவ்வாறு பேசினேன். இந்த ஆடியோ குறித்து ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை முன்பு விசாரணை நடைபெற்று சமாதானம் ஆகிவிட்ட நிலையில்… மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வேலூர் பிரமுகர் மூலமாக இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார் சூர்யா.

டெய்சி யிடம் விசாரணை குழுவினர் இதுகுறித்து கேட்டபோது, ‘சூர்யா இப்படி பேசிய பிறகு அதன் பதிவை அண்ணாமலைஜிக்கு அனுப்பி அவர் எங்கள் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி பிரச்சனையை முடித்து விட்டார். ஆனால் அதன் பிறகு இந்த ஆடியோ எவ்வாறு வெளியானது என்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லி இருக்கிறார்.

திருச்சி சூர்யா குறிப்பிடும் அந்த வேலூர் பிரமுகருக்கு இந்த ஆடியோ டெய்சி தரப்பிடம் இருந்துதான்  கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விசாரணை குழுவினர் அறிந்து பாஜக மாநில தலைவரிடம் ரிப்போர்ட் கொடுத்து விட்டார்கள்.

இந்த நிலையில் விசாரணை முடிந்து பத்திரிகையாளர்களை இருவரும் சந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டும் டெய்ஸி பிடிவாதமாக சூர்யாவுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது நாங்கள் அக்கா தம்பி தான் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த ஆடியோ ஏற்படுத்திய சர்ச்சையை விட இது மேலும் அதிக சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில்…  டெய்சி மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்த அண்ணாமலை,  ஆடியோ வெளிவந்துவிட்ட  சூழலில்  சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் டெய்சி மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும் என்று கருதி இருக்கிறார். அதன்படியே திருச்சி சூர்யா ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

வேறு யாருக்கும் இல்லாத வகையில் சூர்யா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை பற்றி அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், ‘சூர்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

கட்சியின் தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால் அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடி வரும்’ என்று சூர்யா மீது தனக்கு இருக்கும் சாஃப்ட் கார்னரை அண்ணாமலை வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த ஆடியோ சர்ச்சையின் இன்னொரு முனையான டெய்சி மீது விரைவில் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்கிறார்கள் பாஜகவினர்.

அதே நேரம் இந்த ஆடியோவை வெளியிட்ட வேலூர் பிரமுகர் மீதும் அண்ணாமலை தரப்பினரின் கண்காணிப்பு அதிகமாகி இருக்கிறது என்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

பெண்களின் ஆடை : பாபா ராம்தேவின் புதிய சர்ச்சை!

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள் நியமன பட்டியல்!

+1
0
+1
2
+1
0
+1
4
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.