திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலேயே ஒரு பெரும் புலம்பலோசை ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள எம்எல்ஏ ஹாஸ்டல் சென்றால் இந்த விடுதியின் சுவர்கள் கூட சட்டமன்ற உறுப்பினர்களின் புலம்பலைத்தான் எதிரொலிக்கின்றன.
“பேருதான் ஆளுங்கட்சி எம்எல்ஏ. ஆனா, போன சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு வாங்கின கடனை கூட கட்ட முடியாமல் தவிச்சுக்கிட்டு இருக்கோம். ஆளுங்கட்சியான பிறகும் எங்களுக்கு இன்னும் எதுவும் பெரிசா நடக்கலை.
ஒரு டிரான்ஸ்பர் கூட போட முடியலைன்னா பாத்துக்கோங்களேன். அதிகாரிகளும் மதிக்கிறதில்லை” என்ற உரையாடல்களை எம்எல்ஏ ஹாஸ்டலில் கேட்டுக்கேட்டு அந்த சுவர்களும் அதையே எதிரொலிக்கின்றன.
ஒரு கட்டத்தில் இந்த புலம்பல்கள் அதிகமான நிலையில்… நான்கைந்து மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை அழைத்து சில ஆலோசனைகளை நடத்தினார்.
அதன்படி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலன் அடையும் வகையில் நெடுஞ்சாலை துறையின் திட்ட பணிகள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. இந்தத் திட்டப் பணிகள் மூலம் அவர்கள் தங்களையும் கட்சி நிர்வாகிகளையும் வளப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த ஏற்பாடுகளுக்குப் பிறகு எம்எல்ஏக்களின் நிலை என்ன?, அவர்கள் இதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்களா? என்ற ஒரு ரகசிய சர்வே இரண்டு முனைகளில் இருந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
மாநில உளவுத்துறை மூலமாக ஒரு சர்வே, முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனுடைய நிறுவனமான பெனின்சுலா மூலமாக ஒரு சர்வே என இரண்டு திசைகளில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் சர்வே நடத்தப்பட்டது. இந்த இரண்டு சர்வேக்களின் நோக்கமும் ஒன்றுதான்.
ஆனால் கள நிலவரம் துல்லியமாக தெரியவேண்டும் என்பதால்தான் இரு முனைகளிலும் இருந்தும் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேக்களின் முடிவுகள் பெறப்பட்டு இரு முடிவுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகிறது ஆட்சி மேலிடம்.
அதாவது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை மதிக்கிறார்களா இல்லையா? கட்சி நிர்வாகிகளுக்கு உதவி செய்கிறார்களா இல்லையா?
தத்தமது தொகுதியில் சாதி அரசியல் செய்கிறார்களா அல்லது அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்கிறார்களா? கான்ட்ராக்ட்டுகளை கட்சியினருக்குக் கொடுக்கிறார்களா? பிறருக்கு கொடுக்கிறார்களா?
பொதுமக்களோடு தொடர்பில் இருக்கிறார்களா இல்லையா? கட்சியினரின் வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்கிறார்களா, இல்லையா? என்கிற கேள்விகளைத்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை மையமாக வைத்து உளவுத்துறையும் சபரீசனின் பெனின்சுலாவும் தனித்தனியாக கட்சியினரிடம் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு சர்வேக்களையும் ஒப்பீடு செய்ததில் முதற்கட்டமாக சில எம்.எல்.ஏ.க்களின் ஆய்வு முடிவுகள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சர்வேக்களின் முடிவுப்படி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளை கொஞ்சமும் மதிப்பதில்லை என்றும்…
தங்கள் தொகுதியில் இருந்து ஓஏபி எனப்படும் முதியோர் ஓய்வூதிய தொகை பெறுவதற்கு வரும் வயதானவர்களிடம் கூட ஆள் போட்டு லஞ்சம் வசூல் செய்கிறார்கள், கான்ட்ராக்டுகளை அதிமுகவினருக்குத் தான் கொடுக்கிறார்களே தவிர நமது கட்சியினருக்குக் கொடுக்க மாட்டேன்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்சி தரும் இந்த முடிவுகள் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
–வேந்தன்
அதிமுகவுக்கும் சேர்த்து நாங்கதான் குரல் கொடுக்கணும்: அன்று வேலு, இன்று நேரு
அமைச்சர் நேரு சொன்னது சரிதான்: ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!