ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகிய திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று (ஜூலை 6) பேட்டி அளித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று (ஜூலை 5) இரவு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் மருத்துவமனை முன்பு சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் திருவாளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவுள்ளோம். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
அதேபோல் அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. உணமையாக குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 பேர் சரணடைந்துவிட்டதால், புலன் விசாரணையை காவல்துறை நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தலித்துகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை தடுக்கத் தவறினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்த சம்பவம் குறித்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் என்னை தொடர்பு கொண்டு கேட்டனர். மாயாவதியிடமும் பேசியிருக்கிறார்கள்.
உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும். தற்போது சரணடைந்திருக்கும் கொலையாளிகள் மீது நம்பிக்கையில்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உண்மையான குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு உரிய சடங்குகள் செய்ய அனுமதிக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகமான ராமாபாய் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்த தேசிய அளவிலான இயக்கம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சியளிக்கிறது : ராகுல் கமல் இரங்கல்!