சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?

அரசியல்

மதுரையில் இரண்டு அமைச்சர்களுக்கு இடையே நடக்கும் பனிப்போரால் நடிகர் சூரியின் உணவகத்துக்கு சோதனை தொடங்கியிருக்கிறது என்கின்றனர் மதுரை வட்டாரத்தில்.

தமிழ்த் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குபவர் சூரி. இவர், மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை, சுந்தர்ராஜன்பட்டி, விமான நிலையம் அருகில் எனப் பல இடங்களில் சொந்தமாக ’அம்மன் உணவகம்’ என்ற பெயரில் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்.

இந்த உணவகங்களின் நிர்வாகத்தை சூரியின் சகோதரர்கள் கவனித்து வருகின்றனர். இதில் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில் இயங்கிவரும் சூரிக்குச் சொந்தமான அம்மன் உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லாமல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று (செப்டம்பர் 20) சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உணவகத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களுக்கு முறையாக ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

Suri Restaurant Raid: Madurai Ministers to reasons?

இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் வணிகவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சூரி உணவகத்தில் திடீரென வணிகவரித் துறையினர் சோதனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிக்கு வந்த இந்த சோதனைக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்கிறார்கள் மதுரை திமுக வட்டாரத்தில். ஓ… அது என்ன?

”மு.க.ஸ்டாலின் முதல்வராய்ப் பதவியேற்றவுடன், மதுரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இரண்டு அமைச்சர்களை நியமித்தார்.

அதில் ஒருவர், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். மற்றொருவர் வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி.

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரே சூரியின் உணவகத்துக்கும் ஆபத்தாய் வந்துள்ளது. மதுரை திமுகவில் அமைச்சர்கள் பி.டி.ஆர் அணி, மூர்த்தி அணி என இரண்டாகப் பிரிந்து அரசியல் நடைபெறுகிறது.

குறிப்பாக, மதுரை மேயர் தேர்வில் அமைச்சர் மூர்த்தி முன்மொழிந்த வேட்பாளர் நிராகரிக்கப்பட்டு, அமைச்சர் பி.டி.ஆர். முன்மொழிந்த வேட்பாளர் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

அன்றுமுதல் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதனால், மேயர் பதவியேற்பு விழாவையும் புறக்கணித்தார் அமைச்சர் மூர்த்தி. மேலும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.டி.ஆர். கலந்துகொள்வதில்லை.

இதேபோல் அமைச்சர் பி.டி.ஆர். கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மூர்த்தி ஆப்சென்ட் ஆகிவிடுகிறார். இதற்கு மதுரையில் நடக்கும் பல நிகழ்ச்சிகள் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன.

இப்படி, மதுரையில் எதிரும்புதிருமாக அரசியல் செய்யும் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோரால் திமுகவினர் சிக்கிச் சிதைந்துவருகின்றனர்.

குறிப்பாக, இருதரப்பு ஆதரவாளர்களும், அந்த இரு அமைச்சர்களால் பழிவாங்கப்படும் நிலையில், தற்போது நடிகர் சூரியும் அதில் சிக்கியிருக்கிறார்.

நடிகர் சூரியின் உணவகத்தை, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்ததுதான் இந்த சோதனைக்கு முக்கியக் காரணம்.

மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சூரியின் உணவகத்தை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி திறந்துவைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர் பி.டி.ஆர். ஆதரவாளரான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன் ரத்தினவேல், மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனால் நடிகர் சூரி அமைச்சர் பி.டி.ஆருடன் நெருக்கம் காட்டுவதை வைத்து, பி.டி.ஆரைப் பழிவாங்கும் நோக்கில் அவரது ஆதரவாளரான சூரிக்கு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி குறிவைத்திருக்கிறார்” என்கிறார்கள் மதுரை அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில்.

என்னடா இது சூரிக்கு வந்த சோதனை!

ஜெ.பிரகாஷ்

ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

டிஜிட்டல் திண்ணை: திமுகவுக்கு பன்னீர் கொடுத்த தேர்தல் நிதி! அமித் ஷாவிடம் எடப்பாடி சொன்ன ரகசியம்!

+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
+1
4
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *