டிஜிட்டல் திண்ணை: சர்ஜரி… கஸ்டடி…  ஸ்டாலினுக்கு நெருக்கடி! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அப்டேட்டுகள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழ்நாட்டின் மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வைத்த வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி கொடுத்துள்ளது. இன்று மாலை முதல் அமலாக்கத் துறையின் கஸ்டடிக்குச் சென்றுவிட்டார் செந்தில்பாலாஜி. 

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்… எட்டு நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி என்பது வியப்பையும் அதிர்ச்சியையும் திமுக தரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய ஜூன் 16 காலை  காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாலையில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையின் கஸ்டடியில் எட்டு நாட்கள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்திருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

சிகிச்சை பெற்று வரும் அதுவும் இதய சிகிச்சை பெற்று வரும் ஒருவர் எப்படி அமலாக்க துறையின் கஸ்டடியில் இருக்க முடியும்? செந்தில் பாலாஜியின் ஒரு பக்கம் மருத்துவர்களும் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் தங்களது வேலைகளை செய்ய ஆரம்பித்தால் செந்தில் பாலாஜி நிலை என்ன? என்பன போன்ற கேள்விகளை திமுகவினர் எழுப்புகிறார்கள்.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் இதை நீதிமன்றத்தில் எழுப்பிய போது.. மருத்துவமனையில் வைத்துக் கொண்டே அமலாக்க பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 

இந்த இரட்டை நெருக்கடியை செந்தில் பாலாஜியும், ஸ்டாலினும்  எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதுதான்  திமுகவில்  பேச்சாக இருக்கிறது.

இதே நேரம் செந்தில் பாலாஜியின் இரண்டு துறைகளை தங்கம் தென்னரசுவுக்கும் முத்துசாமிக்கும் பகிர்ந்து அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார். ஆனால்,  செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் குற்ற வழக்கில் சிக்கி நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் இருக்கக்கூடாது என்றும் ஆளுநர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாக இன்று இரவு செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒரு பக்கம் ஆளுநர் மூலமாக அரசியல் நெருக்கடி… இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை மூலமாக சட்ட நெருக்கடி என்று இரண்டு நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி மீது ஸ்டாலினுக்கு தனிப்பட்ட அக்கறை ஏன் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கேள்வி கேட்கும் நிலையில் இது பற்றி திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது… செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் காட்டும் அக்கறையில் மூத்த அமைச்சர்கள் உள்ளே உள்ளிட்ட பல அமைச்சர்களும் கருத்து வேறுபாடு கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் செந்தில் பாலாஜி என்ற தனிநபர் விஷயமாக இதை பார்க்காமல் திமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி தரும் வகையில் இருப்பதால்தான் இதை வெளிப்படையாக யாராலும் சொல்ல முடியவில்லை என்ற பேச்சும் திமுகவின் சீனியர்கள் மத்தியில் உலவுகிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து  ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

“செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர்” – அரசாணை வெளியீடு!

கால் விரல்கள் அகற்றம்: நடிகருக்கு உதவிய அமைச்சர்

Surgery Custody Crisis for Stalin
+1
0
+1
2
+1
0
+1
4
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *