அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மாவிற்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் குறித்துப் பேசியதாக வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி சூரத் செஷன்ஸ் கோர்ட் தலைமை நீதித்துறை நடுவர் ஹெச்.ஹெச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
குறிப்பாக, வர்மா தனது 168 பக்க தீர்ப்பில், ”ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) இருந்ததால், அவர் எதைச் சொன்னாலும் அது பொதுமக்களிடம் ‘மிகப் பரவலான தாக்கத்தை’ ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு குறைந்த தண்டனை வழங்கினால், அது பொதுமக்களுக்கு தவறான செய்தியை அனுப்பும், அவதூறு சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தந்தை வழக்கறிஞர் என்பதால், ஹரிஷ் வர்மாவும் வழக்கறிஞர் படிப்பையே இயல்பாக விரும்பி பயின்றுள்ளார்.
அவர் நீதித்துறை பணியில் சேர்ந்து படிப்படியாக நீதிபதியாக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பியிருக்கிறார்.
வதோத்ராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் ஹரிஷ் வர்மா படித்தார்.
அங்கே அவர் எல்.எல்.பி. பட்டப் படிப்பு முடித்ததும் ஜுடிசியல் ஆஃபீசர் எனப்படும் நீதித்துறை அலுவலர் பணியில் 2008 ஆம் ஆண்டு சேர்ந்தார்.
நீதித்துறை அலுவலராக பணியாற்றிய பிறகு படிப்படியாக 2015 ஆம் ஆண்டு சூரத் மாவட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நடுவராக பதவி உயர்வு பெற்றார் ஹரிஷ் வர்மா.
தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் 2022 டிசம்பர் மாதம் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவராக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கி 2 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் ஹெச்.ஹெச்.வர்மா.
மோனிஷா
ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறலா?: பிடிஆருக்கு ஆர்.என்.ரவி பதில்!