பிடிஆர் ஆடியோ வழக்கு: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

அரசியல் இந்தியா

அமைச்சர்‌ பிடிஆர்‌ பழனிவேல்‌ தியாகராஜன்‌ பேசியதாக வெளியான ஆடியோவை வைத்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின்‌ குடும்பத்தை விசாரிக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம்‌ இன்று (ஆகஸ்ட் 7) தள்ளுபடி செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தபோது அவர் பேசியதாக ஆடியோ ஒன்று  கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 2 ஆண்டுகளில் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர்.  தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என கூறியது போல் வெளியாகியிருந்தது.

இந்த ஆடியோ  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ பொய்யானது என்று  பழனிவேல் தியாகராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர் நிதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் பொதுநல வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஆடியோ பதிவு காரணமாகவே பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.  அவரது குரல் இல்லை என்றால், அவர் ஏன் துறை மாற்றப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ”இது முழுக்க முழுக்க போலியான மனு.. ஆடியோ ஒரு வதந்தி. முதல்வர் குடும்பத்தை பிடிஆர் பேசியதற்கான ஆதாரமாக ஆடியோவை தவிர வேறு என்ன இருக்கிறது?  அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது தொடர்பான அரசியல் முடிவுகளுக்கு நீதிமன்றம் பின்னால் செல்ல முடியாது” என்று கூறினார்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர், ”30,000 கோடி செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே… தமிழ்நாடு வாக்காளர் என்ற முறையில், இந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிய தனக்கு உரிமை உண்டு. இதுதொடர்பாக நீதி விசாரணை அவசியம் வேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கு தலைமை நீதிபதி, “குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்‌ இருக்கிறது? ஏதோவொரு ஆடியோவை வைத்துக்கொண்டு விசாரணைக்‌ கமிஷன்‌ போட முடியுமா என்ன? இதனையா ஆர்ட்டிக்கிள்‌ 32 எடுத்துரைக்கிறது..? சட்டத்தை அரசியல்‌ ஆதாயத்திற்கு பயன்படுத்தாதீர்கள்‌” என்று கூறிய அவர், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ஆடியோ கிளிப்களை மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப மனுதாரர் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற அமர்வு, அந்த மனுவையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி

அயோத்தி ராமர் கோவில்: 400 கிலோ எடையுள்ள பூட்டு வழங்கிய முதியவர்!

+1
0
+1
2
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *