supreme court verdict on article 370
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தபோதே அதற்கான தனித்த இறையாண்மை காலாவதியாகிவிட்டது. அதற்கென சிறப்பு அந்தஸ்து ஏதும் கிடையாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று (டிசம்பர் 11) வழங்கிய முக்கியத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல உலகத்தின் பல நாடுகளும் எதிர்பார்த்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று (டிசம்பர் 11) காலை வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் சட்டப்பிரிவு 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை தான் உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சய் கண்ணா, பிஆர் கவாய், சூர்யா காந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்திற்கு காலை 10.55 மணிக்கு நீதிபதிகள் வந்து அமர்ந்தனர். ஐந்து பேர் சார்பாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.
”இந்த விவகாரத்தில் பல சட்ட அம்சங்கள், கூறுகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தபோதே அதற்கான தனித்த இறையாண்மை காலாவதியாகிவிட்டது. அதற்கென சிறப்பு அந்தஸ்து ஏதும் கிடையாது” என்று தனது தீர்ப்பை தொடர்ந்து வாசித்து வருகிறார் தலைமை நீதிபதி சந்திர சூட்.
கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவின் விதிகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை அங்கே சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், ஜாபர் ஷா, துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கியது.
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த மத்திய அரசின் முடிவின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் மனுதாரர்கள் கேள்வி எழுப்பினார்கள். அரசியல் நிர்ணய சபை முடிந்துவிட்ட நிலையில், பிரிவு 370 நிரந்தர அந்தஸ்தைப் பெற்றது என்றும் வாதிட்டனர்.
மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, ராகேஷ் திவேதி, வி.கிரி மற்றும் பலர் வாதிட்டனர். 370வது பிரிவின் விதிகளை ரத்து செய்வதில் “அரசியலமைப்பு மோசடி” எதுவும் இல்லை என்று அவர்கள் வாதாடினார்கள்.
இந்த நிலையில் தான் தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று காலையில் இருந்தே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் காஷ்மீர் மாநில நிர்வாகம் இதை மறுத்துள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்த் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை அறிக்கை!
supreme court verdict on article 370