பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்ததே நாங்கள்தான் என தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்டத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 7 )அங்கீகரித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு பற்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 103 வது திருத்தம் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2005 – 2006 காலகட்டங்களில் துவக்கப்பட்டது.
இதற்காக மன்மோகன் சிங் அரசு அமைத்த சின்ஹோ கமிஷன் தனது அறிக்கையை ஜூலை 2010 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. இந்த ஆணையம் தனது பரிந்துரையை 2010-ல் வழங்கியது. அதன் பிறகு நாடு தழுவிய விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, 2014-க்குள் மசோதா தயாரிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு பாஜக உரிமை கோரி வரும் நிலையில், அதற்கு காங்கிரஸும் போட்டி போடுவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்