ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்திற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிராணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
இந்தசூழலில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல ஆணையங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரோத்தகி, அனிருதா போஸ், ஹிரிஷேக் ராய், சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “விலங்குகள் வளர்ப்பின் போது வலி ஏற்படுவது இயற்கையானது.
அத்தகைய வலி அல்லது துன்பம் தேவையற்றதா என்பதை நீதிமன்றம் கண்டறிய வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51 A-ன் கீழ் விலங்குகளுக்கு உரிமை உண்டு என்று வாதிட முடியாது” என்று தெரிவித்தார்.
பீட்டா தரப்பில், “ஜல்லிக்கட்டு போட்டியில் மனிதர்கள் காயப்படுகிறார்கள் உயிரிழக்கிறார்கள். விலங்குகள் துன்புறுத்தப்படுகிறது. காளைகள் கேளிக்கை பொருள் அல்ல. அவற்றை காட்சிப்படுத்தி துன்புறுத்தக்கூடாது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் காட்சி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று சட்டமன்றம் அறிவித்துள்ள நிலையில் நீதித்துறை வேறு கருத்தை எடுக்க முடியாது. அதனை முடிவு செய்ய சட்டமன்றமே மிகவும் பொருத்தமானது.
ஜல்லிக்கட்டு என்பது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று மாநில அரசு சட்டத்திருத்தத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி ஜல்லிக்கட்டு என்ற சட்டமன்றத்தின் பார்வையை நாங்கள் சீர்குலைக்க மாட்டோம்.
தமிழக அரசு இயற்றியுள்ள விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளை ஈர்க்கும் வகையில் விளையாட்டுகள் நடத்தப்பட்டதால், விலங்குகளுக்கு ஏற்படும் வலியையும் துன்பமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்ட பிரிவுகள் 51 A g மற்றும் j அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை.
அரசியலமைப்பின் பிரிவு 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறவில்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கம்பளா மற்றும் காளை வண்டி பந்தயத்தை அனுமதிக்கும் சட்டங்களையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது” என்று தெரிவித்தனர்.
செல்வம்
பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!
சித்தராமையா பதவியேற்பு விழாவில் ஸ்டாலின்