அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை தினம்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுபான வழக்கு: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!
புதிய வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!