கர்நாடக நீதிபதி ஸ்ரீஷானந்தா வழக்கில் “இந்தியாவில் இருக்கும் எந்த பகுதியையும் நாம் பாகிஸ்தான் என்று அழைக்கக் கூடாது. அது இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.” என்று உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 25) அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக நீதிபதி ஸ்ரீஷானந்தா விசாரித்த இரண்டு வழக்குகளின் காணொளிகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
அதில் ஒரு காணொளியில் மைசூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி பாகிஸ்தானில் உள்ளது என்று நீதிபதி ஸ்ரீஷானந்தா கூறியிருப்பார்.
மற்றொரு காணொளியில், ஒரு பெண் வழக்கறிஞரிடம் உங்களுக்கு எதிர் தரப்பினர் பற்றி எல்லா விஷயமும் தெரியும் போல. அவர் என்ன நிறத்தில் உள்ளாடை அணிந்திருக்கிறார் என்பது கூட தெரியும் போல? என்று பேசியிருப்பார்.
நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் இந்த போக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யா கந்த் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் பேச்சுகளைக் கண்டித்தது.
தொடர்ந்து தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் “இந்தியாவில் இருக்கும் எந்த பகுதியையும் நாம் பாகிஸ்தான் என்று அழைக்கக் கூடாது. அது இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.
வழக்கின் போக்கில், நீதிபதி ஸ்ரீஷானந்தா வெளிப்படுத்திய கருத்துகள் அவரது தனிப்பட்ட சார்புகளைக் குறிக்கக்கூடும். ஒருவர் ஆணாதிக்க கருத்துகளோ அல்லது பெண் வெறுப்பு கருத்துகளையோ வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினம் மீதான இதுபோன்ற கருத்துகள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவை சமூகத்தால் எதிர்மறையாக பார்க்கப்படும்.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான உயர் நீதிமன்றங்கள் வழக்குகளை நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த மாதிரி சூழலில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் நீதிமன்றத்தில் தாங்கள் பேசுவதை நீதிமன்றத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, சமூகத்தைச் சேர்ந்த பலர் பார்ப்பார்கள் என்று அறிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு நீதிபதியும் பாரபட்சமற்றவர்களாக இருந்தால் மட்டும்தான் நீதியை வழங்க முடியும்.
குறிப்பாக நமது அரசியலமைப்பில் உள்ள விழுமியங்கள்தான் நீதிபதிகளை வழிநடத்தவேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு இடையே, “இந்த வழக்கை பொது வெளியில் விசாரிக்க வேண்டாம்” என்று இந்தியாவின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமனி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா கேட்டுக்கொண்டனர்.
எனினும் இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முன்னதாக கடந்த 21ஆம் தேதி, நீதிபதி ஸ்ரீஷானந்தா தான் பேசியதற்காகக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மும்பை சித்திவிநாயகர் கோவில் பிரசாதத்தில் எலிகள்?: நிர்வாகம் மறுப்பு!
திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்!
Comments are closed.