செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published On:

| By Selvam

தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 1) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பண மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை  பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்,  வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.எஸ் ஓகா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, “செந்தில் பாலாஜி கடந்த 8 மாதமாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதி ஏ.எஸ் ஓகா, “கீழமை நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. விசாரணை தொடங்கியதும் அதுபற்றி யோசிக்கலாம். அமலாக்கத்துறை இந்த வழக்கில் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். பின்னர் ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!

வாரிசு அரசியல் என்பது… மோடி கொடுத்த விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share