ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

Published On:

| By christopher

supreme court send notice on rn ravi case

சட்டமன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. supreme court send notice on rn ravi case

’ஏன் கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார்?’ என உச்சநீதிமன்றத்திற்கு அவர் சார்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வருவதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “ஆளுநர் தனது செயலற்ற தன்மையால், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முடக்கி வைத்து, அரசு நிர்வாகத்துடன் ஒத்துழைக்காமல், விரோத போக்கை உருவாக்கி வருகிறார்.

சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

ஆளுநர்கள் போடும் முட்டுக்கட்டைகள்!

அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில், “கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது. கைதிகளை முன்னரே விடுவிக்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாமல் மறுக்கிறார். 12 முக்கியமான காலி பணியிடங்களில் 10 பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்புகளை கிடப்பில் ஆளுநர் போட்டு வைத்திருக்கிறார். இதன்மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார்.

ஆளுநர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ‘As Soon As Possible’ என்ற வார்த்தையைத் தமிழக ஆளுநர் தவறாகப் புரிந்துகொண்டு தவறான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார்.  இது அரசின் உரிமைகளை பறிக்கும் விஷயம் என்று ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம்.

தமிழகம் முதல் காஷ்மீர் வரை மாநில அரசுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஆளுநர்கள் போடும் முட்டுக்கட்டைகள். மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர்கள் மறுக்கும் இந்த போக்கு ஒரு பரவும் நோய் போல் காணப்படுகிறது.

ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போன்று செயல்படுகின்றனர். காரணமே இல்லாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களில் உத்தரவுகளில் கையெழுத்திடவில்லை. இப்போது மசோதாக்களுக்கு அனுமதி வழங்குமாறு தான் கெஞ்சுகிறோம். ஏதாவது செய்ய வேண்டும்” என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

ஆளுநர்கள் மற்றும் அரசுகளுக்கு இடையே மோதல்!

அவரைத் தொடர்ந்து தமிழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, பி வில்சன் ஆகியோரும் ஆஜராகி வாதாடினர்.

அவர்கள் தங்களது வாதத்தில், “ஆளுநர் ரவிக்கும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மாநில அரசுக்கும் இடையேயான உறவில் சில காலமாக விரிசல் நிலவி வருகிறது.

ஜனவரி மாதம், மாநில அரசு தயாரித்த உரையின் சில பகுதிகளை கவர்னர் புறக்கணித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

மாநில ஆளுநர்கள் மற்றும் அரசுகளுக்கு இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் அடிக்கடி வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

ஏப்ரல் மாதம்,  மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் தங்கள் ஒப்புதலைத் தாமதப்படுத்துவதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் உள்ள ஆணையை மனதில் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா மாநிலம் முன்பு மனு தாக்கல் செய்தது.

இதே போன்று ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மற்றும் கேரளா அரசு தாக்கல் செய்துள்ள மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று வாதிட்டனர்.

மிகுந்த கவலை அளிக்கிறது!

இதனை அனைத்தையும் கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ”தமிழ்நாடு ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருக்கக்கூடிய வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக அரசு எழுப்பிய பிரச்சனைகள் மிகுந்த கவலை அளிக்கிறது.

அட்டவணைப்படுத்தப்பட்ட அறிக்கைகளில் இருந்து, 200 வது பிரிவின் கீழ் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் அனுமதி வழங்குதல், முன்கூட்டியே விடுவித்தல் மற்றும் நியமனம் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பிற விஷயங்கள் என எதற்குமே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழக அரசு ஆளுநர் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என இதுதொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சக செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வரும் வாரம் தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை அதன்பின்னர் விசாரிக்கலாமா? எனக் கேட்டதோடு, வரும் 20ஆம் தேதி இந்த வழக்கு முழுமையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். supreme court send notice on rn ravi case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”மாலைக்குள் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்”: முதல்வர் ஸ்டாலின்

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி : சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share