6 பேரும் விடுதலை : தீர்ப்பில் நீதிபதிகள் சொன்னது என்ன?

அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவாளிகள் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிறையில் இவர்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததாகவும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு கடந்த மே 17ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.

பேரறிவாளன் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஆளுநரின் முடிவு என்பது மாநில அரசின் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டது என்பதைத் தெரிவித்திருந்தது.

இதை மேற்கோள்காட்டி பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து நளினியும் , ரவிச்சந்திரனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் இன்று (நவம்பர் 11) தீர்ப்பளித்த நீதிபதிகள், ”ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை கைதியான ராபர்ட் பயாசை பொறுத்தவரை அவரது நடத்தை சிறையில் திருப்திகரமாகவே இருந்துள்ளது.

மேலும் அவர் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆயினும் பல்வேறு பட்டங்களைச் சிறையிலிருந்தபடியே பெற்றுள்ளார்.

ஜெயக்குமாரின் நடத்தையும் சிறையில் திருப்திகரமாகவே இருந்துள்ளது. அவரும் சிறையிலிருந்தபடி பல்வேறு படிப்புகளைப் படித்துள்ளார்.

இன்னொரு தண்டனை கைதியான ராஜா பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தவாறு அவர் எழுதிய கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு விருதுகளையும் பெற்றிருக்கின்றன.

ரவிச்சந்திரனை பொறுத்தவரை அவரது நடத்தையும் திருப்திகரமாகவே இருந்துள்ளது. அவரும் பல்வேறு படிப்புகளை முடித்துள்ளார். சிறையிலிருந்தபடியே பல தொண்டுகளையும் அவர் செய்துள்ளார்.

முருகனின் செயல்பாடும் திருப்திகரமாகவே இருந்துள்ளது. அவரும் பல்வேறு படிப்புகளை படித்துள்ளார்” என்று ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு கூறியுள்ள நீதிபதிகள் நளினியை பற்றி குறிப்பிடும் போது, ஒரு பெண்ணான நளினி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார்.

அவரது நடத்தையும் திருப்திகரமாகவே இருந்துள்ளது. சிறையில் இருந்தபடியே அவர் கணினி துறையில் பட்டய படிப்பு படித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் வேறு எந்த வழக்கும் இல்லை எனில் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

2018ல் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரியா

“அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி”- டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து!

ராஜீவ் கொலை வழக்கில் நளினி விடுதலை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *