தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 11) தள்ளுபடி செய்துள்ளது.
”2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயேகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார்.
எனவே, அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று தேனி தொகுதி வாக்காளரான மிலானி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
”தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுவை நிராகரித்ததோடு, தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது. தற்போதைய நிலையில், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.
ஜெ.பிரகாஷ்
அதிமுக தனித்து நிற்க தயார்: செல்லூர் ராஜூ
சேலம் இளங்கோவன் சம்மன்: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!