சனாதனத்துக்கு எதிராக பேசிய உதயநிதி, பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 15) மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார்.
இதற்கு பாஜக, இந்துத்துவ மற்றும் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வலதுசாரி வழக்கறிஞர்கள் கோரிக்கை!
இந்த வழக்கு பட்டியிலிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலதுசாரி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் முறையிட்டனர்.
நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா?
இதற்கு தலைமை நீதிபதி சந்திர சூட், “எந்த வழக்காக இருந்தாலும் முறையீட்டுக்கான உரிய வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களே இப்படி ஒழுங்கீனமாக நடந்துகொள்ளலாமா?” என்று கேள்வியெழுப்பி இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் உரிய வழிமுறைப்படி வழக்கு குறித்து வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 18) முறையிட மனுதாரர்களுக்கு சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் திங்கட்கிழமை இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வலதுசாரி வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளனர்.
மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க வேண்டும் எனில் அது குறித்து முன்கூட்டியே நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் பதிவாளர் ஒரு எண்ணை கொடுப்பார் இதை வைத்துதான் அவசர மனு குறித்த கோரிக்கையை நீதிமன்றத்தில் எழுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் மகளிர் உரிமை தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!