பிகார் இட ஒதுக்கீடு மசோதா… உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

அரசியல்

பிகார் இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக உயர்த்தும் அறிவிப்பை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 29) இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது.

பிகார் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது.

இதனையடுத்து இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக உயர்த்தி, பிகார் மாநில சட்டமன்றத்தில், சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 18 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 12 சதவிகிதத்திலிந்து 18-ஆகவும், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 16லிருந்து 20 சதவிகிதமாகவும், பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 1லிருந்து 2 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது.

இந்த இட ஒதுக்கீடு சட்டமசோதாவை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினோத் சந்திரன், ஹரிஷ் குமார் ஆகியோர் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பிகார் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு சட்டமசோதா செல்லாது என்று உத்தரவிட்டனர்.

பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பிகார் மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பிகார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியம் திவான், “சத்தீஸ்கர் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட இதேபோன்றதொரு மசோதா தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியது. அதேபோல பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த வழக்கை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மருத்துவரின் கண்டனம்…. சர்ச்சைப் பதிவை நீக்கிய நயன்தாரா

நாடாளுமன்றத்தில் ராகுல் அட்டாக்: தலையில் கைவைத்த நிர்மலா சீதாராமன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *