தன் மீதான 11 வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 14) தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மிகவும் கேவலமாக பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உட்பட ஏழு காவல் நிலையங்களில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதுமட்டும் இன்றி எக்ஸ் வலைதளத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ஹெச்.ராஜா பதிவிட்டதாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகம் புகார் அளித்தது.
அந்த புகார் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக தரக்குறைவான கருத்துகளை ஹெச்.ராஜா கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டன.
இப்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்ட 11 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஹெச்.ராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரஷாந்த் குமார் மிஷ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர், “பெண்களை அவமதிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் ஹெச்.ராஜா பேசவில்லை. எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது நீதிபதிகள், “உங்களுடைய வாதங்களால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். ஆனால், சிம்பிளாக இந்த வழக்கை நாங்கள் டிஸ்மிஸ் செய்யப்போகிறோம். அரசியலில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை கவனத்தில் கொண்டு பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் பேச வேண்டும்” என்று கூறி ஹெச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொளுத்தும் வெயில்: சென்னை, மதுரையில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு!
தனிச்செயலாளர் தினேஷ் குமார் தந்தை மறைவு: ஸ்டாலின் அஞ்சலி!