உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 10) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர்களை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றின் மூலம் கைது செய்வது, தேர்தலில் சமமான போட்டியையும், ஜனநாயகத்தையும் அழித்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை தொடர்ந்து, புதிய மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை இரவோடு இரவாக கைது செய்தது.
கெஜ்ரிவால் கைதிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக அமெரிக்கா, ஜெர்மனி தொடங்கி ஐ.நா சபையில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
இதற்கிடையே அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், ”அரவிந்த் கெஜ்ரிவால் கைதிற்கு வலுவான ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்பித்துள்ளது. எனவே கைது நடவடிக்கையில் விதிமீறல்கள் இல்லை. சட்டப்படி சரிதான். மதுபான கொள்கையை உருவாக்கியதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பங்கிருப்பது தெரிகிறது. எனவே கைது நடவடிக்கையை செல்லாது என்று கூற முடியாது.
சாமானியர், முதல்வர் என்று வேறுபடுத்தி விசாரிக்க ஒரு புலனாய்வு அமைப்பிற்கு தனி நெறிமுறை எதுவும் இல்லை. முதல்வர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி எந்தவித சலுகையும் வழங்கப்படாது” என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மட்டுமின்றி இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க உத்தரவிடுமாறு கெஜ்ரிவால் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் கோரிக்கை வைத்தார்.
எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த சந்திரசூட், ’விரைவில் இந்த மனு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும்’ என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் அடுத்த 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதால், கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வரும் திங்கள்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Video: “நான் பேச வேண்டாமா?”… மேடையில் நடிகை அனுபமாவிற்கு நடந்த மோசமான சம்பவம்…!
தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கு சம்மன் அனுப்பக் கூடாது…அமலாக்கத்துறைக்கு கேரள நீதிமன்றம் உத்தரவு