முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 6) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தபோது, முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தங்களது அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் நோக்கில் பேசியதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் டிரஸ்டி ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து எல்.முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எல்.முருகன் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (டிசம்பர் 4) விசாரணைக்கு வந்தது.
எல்.முருகன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் கே.பரமேஷ்வர் ஆஜராகி, முரசொலி அறக்கட்டளை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் அந்த கருத்தை எல்.முருகன் தெரிவித்ததாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று மனுதாரர் கூறுகிறார். இதனை ஏற்க நீங்கள் தயாரா?” என்று ஆர்.எஸ்.பாரதி தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி, “பெருந்தன்மையின் அடிப்படையில் எல்.முருகன் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, “உச்சநீதிமன்றம் முரசொலி அறக்கட்டளையின் பெருந்தன்மையை பாராட்டுகிறது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணையை ரத்து செய்து வழக்கை முடித்துவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ட்ரூ காலருக்குப் போட்டியாக ஒரு செயலி!
இரட்டை இலை… ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!