சவுக்கு சங்கர் மீதான இரண்டாவது குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 25) ரத்து செய்தது.
யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் அதிகாரிகளை தவறாக பேசியது மற்றும் கஞ்சா பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். சென்னை, திருச்சி, தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ரத்து செய்தது.
இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில் ஆட்சியர் ஷஜீவனா உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இரண்டாவது முறையாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் அவரை ஜாமீனில் விடுவிக்க கோரியும் சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை ஆய்வு செய்வதற்கான அரசின் சட்ட அறிவுரை குழுவானது, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று பரிந்துரைத்தது.
எனவே இந்த பரிந்துரையின்படி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை இன்று திரும்ப பெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் அவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஹெச்.டி.எப்.சி வங்கியில் சேரில் இருந்து விழுந்து பெண் ஊழியர் பலி… வேலை அழுத்தம் காரணமா?