அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அவர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக,
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
அதையடுத்து, செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது போலீஸார் 3 மோசடி வழக்குகள் பதிவுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பண மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் ஒரு வழக்கு தொடர்ந்தது.
இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு, செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத் துறையின் இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கப் பிரிவின் சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று (டிசம்பர் 13) விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
இளம் வீரரை புகழ்ந்துதள்ளிய தினேஷ் கார்த்திக்: ஏன் தெரியுமா?
ராவல்பிண்டி மைதானம்: அபாய நிலைக்கு தள்ளிய ஐசிசி