செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து மீண்டும் முழுமையான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று (மே 16) உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் கூறியதை அடுத்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய்.பாலாஜி  மற்றும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கினை நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான புகார் மனு மீது மீண்டும் முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதில் தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும், அடுத்த 2 மாதங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

’பதவிக்காக முதுகில் குத்த மாட்டேன்’: உறுதியளித்த டி.கே. சிவகுமார்

கெட்டு போன கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel