ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கின் விவரங்கள்
கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சியில் பல பொறுப்புகளை வகித்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி வழக்கில் கைது செய்யப்பட்டபோது, சில மாதங்கள் முதலமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். மேலும் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், வருவாய்த் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2006ம் ஆண்டிற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது.
தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. 2001 முதல் 2006 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் ஓ.பி.எஸ்-சின் சொத்து மதிப்பு 374 சதவீதம் உயர்ந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த வழக்கை சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தை ஓ.பி.எஸ் அணுகினார். அதன்பிறகு இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2012 ஆம் ஆண்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என சொன்னதன் அடிப்படையில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
மீண்டும் வழக்கை கையிலெடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்ட இந்த வழக்கினை தாமாக முன்வந்து மீண்டும் கையிலெடுத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். ஏற்கனவே இதேபோல் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக மீண்டும் விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
இந்த வழக்கினை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பி.எஸ்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓ.பி.எஸ்-சின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-விவேகானந்தன்
’பம்பரம்’ சின்னம் : தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு… வைகோ ரியாக்சன்!
இது திராவிட மண்..தைரியமிருந்தா நிர்மலா சீதாராமனை தேர்தலில் நிற்க சொல்லுங்க – பொங்கிய கே.பி.முனுசாமி
மிகக்குறைந்த ‘விலையில்’ 5 ஜி ஸ்மாா்ட் போன்… பிரபல நிறுவனத்தின் ‘சூப்பர்’ அப்டேட்!