“தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) விடுதலை செய்து உத்தரவிட்டது. நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 6 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு நளினி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (நவம்பர் 11) நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ”ஆறு பேரும் விடுதலையானதில் மிகமிக மகிழ்ச்சி.
நிம்மதியாய் இருக்கிறது. 32 ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் யாரும் எங்களை மறக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். நாங்கள் இந்த தவறை செய்திருப்பதாக பாதி பேர் நினைத்தனர்.
அதேநேரத்தில், நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை உணர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில், தமிழக மக்கள் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நானும் பேரறிவாளனும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தோம். அதற்கான முயற்சிகளையும் செய்துகொண்டிருந்தோம்.
ராஜிவ் காந்தி வழக்கு நிலுவையில் இருந்தபோதுகூட நாங்கள் முயற்சியை நிறுத்தியது இல்லை. நாங்கள் இதில் ஜெயிப்போம் என்று நினைத்தோம்.
அதுதான் இன்று நடந்துள்ளது. என் வீட்டுக்காரரின் துயரங்களுக்கு எல்லாம் இன்றுதான் விடிவு கிடைத்துள்ளது. நான் விடுதலையானது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த விடுதலை நிம்மதியைத் தந்திருக்கிறது” என அதில் நளினி தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
காந்தி பல்கலை: வெள்ளை தொப்பியில் மோடி, ஸ்டாலின்
10% இடஒதுக்கீடு: அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!