அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இன்று (ஜூலை 27) அமலாக்கத் துறைக்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அமலாக்கத் துறை என்பது பொருளாதார குற்றங்களை கையாளும் ஒரு அமைப்பு. வெளிநாட்டு பணபரிவர்த்தனைகளை கண்காணித்து, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இந்நிலையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 20 மற்றும் 21க்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எல்லா குற்றத்தையும் பண மோசடி குற்றமாக அமலாக்கத் துறை மாற்றி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்று அமலாக்கத் துறை மீது தொடர் புகார்கள் எழுந்தன.

மெகபூபா முப்தி, கார்த்தி சிதம்பரம் வழக்கு!
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த உடனே சோதனையில் ஈடுபடுவது, சொத்துகளை பறிமுதல் செய்வது, வழக்குத் தொடர்பான ஆவணங்களை தர மறுத்து இழுத்தடிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி தரக்கூடாது. 2018ம் ஆண்டு இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மாறாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் (PMLA) செல்லும் என்று தீர்ப்பளித்தனர். அதன்படி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் யாரையும் அமலாக்கத்துறை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா