அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் டிசம்பர் 12ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23, 2022க்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர் செல்வமும், பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே நவம்பர் 21, நவம்பர் 30ஆகிய தேதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (டிசம்பர் 6) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், “கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுக்கிறது.
இதனால் கட்சி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில், “வழக்கறிஞருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் ஆஜராக முடியவில்லை” என கூறி வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை ஒத்திவைக்க கேட்டு எங்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க, இடையீட்டு மனு தாக்கல் செய்யுமாறு ஈபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரியா
சமந்தாவின் ‘யசோதா’: ஓடிடி ரிலீஸ் எப்போது?
பாஜகவிலிருந்து திருச்சி சூர்யா விலகல்!