குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 19) ஒத்திவைத்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஓவைசியின் மஜ்லீஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் தன்னார்வல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று 237 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க நான்கு வார காலம் அவகாசம் தேவை.
இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. அதனால் மனுதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரும் மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மமக, தவாக கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க இயலாதது வருத்தம்: ஸ்டாலின்
MS DHONI: உலகிலேயே சிறந்த கேப்டன்… சொன்னது யாருன்னு பாருங்க!