தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் எஸ்.பி.ஐ. வரும் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 18) உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து, கடந்த மாதம் 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்கள், அவற்றைப் பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்களின் விவரங்களை அளித்தது. இந்த தேர்தல் பத்திர விவரங்களைத் தேர்தல் ஆணையம் பொது வெளியில் பகிர்ந்தது. இதில் தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு, எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனையடுத்து, தேர்தல் பத்திர எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது ஆகியவற்றை வழங்க எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகின.
எஸ்பிஐ – நேர்மையாக இல்லை!
இந்நிலையில், தேர்தல் பத்திரம் மீதான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது என்றும், அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யாதது ஏன் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்.பி.ஐ.யின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை. தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ. வங்கியின் அணுகுமுறை சரியில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த எஸ்.பி.ஐ. வங்கி தரப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
தனி அடையாள எண் முக்கியம்!
அதற்கு உச்சநீதிமன்ற அமர்வு, “தேர்தல் பத்திர எண்களையும் உள்ளடக்கிய அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வெளிப்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே நாங்கள் கேட்டிருந்தோம். அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றால் அதற்குப் பொருள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் தேதி. எவ்வளவு தொகை மற்றும் தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண் என அனைத்தும் தான். எஸ்பிஐ நீதிமன்றத்திற்கு நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு உங்கள் வசம் உள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எல்லா தகவல்களும் தேவை” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் “போலி பத்திரம் அல்ல என்பதை உறுதிப்படுத்த, தேர்தல் பத்திர எண் முக்கியமானது. எனவே ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களில் எதையும் மறைக்காமல் மார்ச் 21 அன்று மாலை 5 மணிக்கு வெளியிட வேண்டும்” என எஸ்.பி.ஐ. வங்கி தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இவை தான்!
மதிமுக வேட்பாளர் துரை வைகோ… தாயகத்தில் இன்று கூட்டம்!
ஐயா, எப்பவுமே கஸ்டமருங்களை அலைய விடறதுதான் எங்க பாலிஸி. இப்படி நீங்க “எல்லா விவரமும் வேணும்”ணு சொன்னாலும், நாங்க எப்படி புரிஞ்சிகிட்டோமோ அப்படி கொஞ்சம், கொஞ்சமாதான் சொல்வோம். அது எங்க பரம்பரை பாலிஸிங்க ஐயா