முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) இடைக்கால தடை விதித்துள்ளது.
2001-2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மனைவி விஜயலட்சுமி மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை விடுவித்தது.
இந்நிலையில், கீழமை நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், “சொத்துக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர்கள் மீதான முடித்துவைத்த வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சிலருக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், என் மீதான சூமோட்டோ வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய், மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்னர் சார்லசுக்கும் இந்த இந்திய பெண்ணுக்கும் அப்படி என்ன கனெக்ஷன்?
அதானி விவாரத்தில் திமுக அரசை சும்மா விடமாட்டோம்… உயர்நீதிமன்றத்தை நாடும் பாமக