கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) காலை தீர்ப்பு வழங்குகிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக் கழகப் பெண்கள் கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்மாநில அரசு தடை விதித்தது.
இது முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது.
தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
அதனை தொடர்ந்து ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி கோரி மாணவிகள் சிலர் கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 15ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மனு!
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த மாதம் 22ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வருவதைத் தடுப்பது, அவர்கள் கல்வி கற்பதை முற்றிலுமாக நிறுத்திவிடும் என்றும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும் என்றும் வாதிட்டனர்.
ஹிஜாப் தொடர்பாக பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு “மத நடுநிலையானது” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.
இன்று காலை தீர்ப்பு!
இந்நிலையில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பினை அறிவிக்க உள்ளது.
நாட்டில் இஸ்லாமியருக்கு எதிராக பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வெறுப்புவாத செயல்கள் அரங்கேறி வரும் நிலையில், ஹிஜாப் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ள தீர்ப்பு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பு அதிகரிப்பு?
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாதது ஏன்? விளக்கமளிக்கும் ரிசர்வ் வங்கி!
தீர்ப்பு சொல்லுபவர்க்கு கவர்னர் பதவி உண்டா இல்லையா என்பதை பொறுத்து இருக்கும்