இந்தியாவில் தற்போது பரபரப்பான விவாதமாக இருக்கக் கூடிய ஒரு டாப்பிக் இலவச திட்டங்கள். இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை போடுவதாக பிரதமர் மோடி பேசியதுதான் இந்த பரபரப்புக்கு காரணம்.
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபத்யாயா.
இதுமாதிரியான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு புதிது கிடையாது. 2013ம் ஆண்டே திமுகவுக்கு எதிரான ஒரு வழக்கில் இலவசங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது உச்சநீதிமன்றம்.
2006ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, இலவச கலர் டிவி வழங்கியது அதிக கவனம் பெற்றது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினார் சுப்ரமணியன் பாலாஜி என்ற வழக்கறிஞர்.
2013ம் ஆண்டு இந்த வழக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளை தெரிவித்தது நீதிமன்றம். அதுவும் தற்போது அதை தெரிந்து கொள்ள வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.
மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்தது. இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய விஷயம், இலவச திட்டங்கள் லஞ்சம் கிடையாது, இலவசங்கள் வழங்குவது தவறும் கிடையாது என்பதுதான்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வேட்பாளர்களை பற்றிதான் பேசுகிறதே தவிர மொத்தமாக அரசியல் கட்சிகளை பற்றி பேசவில்லை என சுட்டிக்காட்டியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… என்றுதான் இந்த இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இது எதிர்கால அரசின் வாக்குறுதிதானே தவிர தனிப்பட்ட நபரின் வாக்குறுதி கிடையாது என விளக்கமளித்தது உச்சநீதிமன்றம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய திட்டங்களை லஞ்சம் என்று சொல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக் கூடிய இலவச திட்டங்கள் அரசியலமைப்பை மீறாததால் அதில் உச்சநீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பியது. அரசு திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கும் போது என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அரசியலமைப்பின் Directive Principles of State Policy விளக்குகிறது.
அதை அரசு மீறினால் மட்டுமே நீதிமன்றத்தால் அதை கேள்வி கேட்க முடியும். காலத்திற்கு ஏற்ற மாதிரி வாழ்க்கை முறை மாறும் போது, கலர் டிவி மக்களுக்கு தேவையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று விளக்கிவிட்டது உச்சநீதிமன்றம்.
திமுக அரசின் வாக்குறுதிகள், சில தரப்பினருக்கு மட்டும் பயன்படக் கூடியதாக இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், மக்களின் தேவைகள் மற்றும் நிதியை பொறுத்து திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் அரசுக்கே இருப்பதாக தெரிவித்தது.
அதேபோல் அரசியல் கட்சிகள் என்ன மாதிரியான வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும், கொடுக்க கூடாது என்று உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
Comptroller and Auditor General என்பவர் ஆடிட்டர் மட்டும் தான். அரசுகள் எவ்வாறு பணத்தை செலவிட வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரம் அவருக்கு கிடையாது என்றும் தீர்ப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கிலும் இதுமாதிரியான சில கருத்துக்களே கூறப்படுகிறது. இலவச திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
இலவசங்கள் வழங்கப்பட கூடாது என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் மக்களுக்கான நிவாரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்.ஜெயப்ரியா