மோடி ஆவணப்பட வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

அரசியல்

மோடி ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி ஊடகத்தை இந்தியாவில் தடை செய்யக் கோரி இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 10)தள்ளுபடி செய்தது.

இங்கிலாந்து செய்தி ஊடகமான பிபிசி, குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாக இரண்டு பகுதிகளாக India: The Modi Question ஆவணப்படத்தை வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தில் 2002-ஆம்ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி தான் காரணம் என்றும், கடந்த 2014-ஆம்ஆண்டு முதல் நடைபெற்று வரும் மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த ஆவணப்படமானது காலனிய மனோபாவத்துடன் எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இந்த படத்தை இந்தியாவில் தடை செய்தது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்தியா முழுவதும் மோடி ஆவணப்படத்தை எதிர்க்கட்சிகள் திரையிட்டனர்.

இந்தநிலையில், இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, மோடி ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி ஊடகத்தை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “பிபிசி ஊடகமானது இந்தியாவிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிரான சார்புடையது. உலக அளவில் இந்தியா மற்றும் மோடியின் வளர்ச்சிக்கு எதிரான சதியாக மோடி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத நல்லிணக்கத்தை அழிக்கவும் இந்து மதத்திற்கு எதிராகவும் ஆவணப்படம் உள்ளது. எனவே பிபிசி ஊடகத்தை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சிவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள், “பிபிசி ஊடகத்தை தடை செய்யுமாறு நீங்கள் எப்படி நீதிமன்றத்தில் வாதாட முடியும்? இது முற்றிலும் தவறான ஒருவாதம். இது விசாரணைக்கு உகந்த வழக்கு இல்லை என்பதால் இதனை தள்ளுபடி செய்கிறோம்.” என்று உத்தரவிட்டது.

செல்வம்

எய்ம்ஸ் மருத்துவமனை: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0