உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 3) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி இரண்டு வழக்குகள் தொடர்ந்தார்.
அதில், உதயநிதி தன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மீது 22 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரது வெற்றி செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதில், “வேட்பு மனுவில் பொய்யான தகவலை உதயநிதி அளித்துள்ளார் என தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியின் வேட்புமனுவை ஏற்றது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறானது. விதிகளை மீறிப் பெற்ற இந்த வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உதயநிதிக்கு எதிரான இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: விடிந்தால் டிஸ்மிஸ்- நள்ளிரவில் விலகிய காயத்ரி- நடந்தது என்ன?
புதுக்கோட்டை தீண்டாமை: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!