முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில், அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை எனவும், அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுமணி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வுமுன் விசாரணைக்கு (செப்டம்பர் 5) வந்தபோது, வேலுமணி தரப்பில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ராஜூ ஆஜராகியிருந்தார்.
மத்திய அரசின் வழக்கறிஞர் ஓர் ஊழல் வழக்கில் வேலுமணிக்காக எப்படி ஆஜராகலாம் என தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார்.
மேலும் இந்த மனு தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசமும் கோரியிருந்தார். மேலும், வேலுமணிக்கு எதிராக பதிவுச்செய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்துச் செய்யக்கோரிய மனுக்களை தனி நீதிபதி மட்டுமே விசாரணை செய்ய வேண்டும், இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், “டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்துக் செய்யக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும்” என்று உத்தரவிட்டது. மேலும் ”வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக முடியாது” என்ற தமிழக அரசின் ஆட்சேபனையையும் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 9) காலை விசாரணைக்கு வந்தபோது, ”இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க கூடாது. எதிர்மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது, விசாரணை அறிக்கை மட்டுமே எஸ்.பி.வேலுமணி கேட்டார்; வழக்கை ரத்து செய்ய கோரவில்லை எனவும் அவர் வாதத்தை முன்வைத்தார். இதற்கு எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை எனவும், எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டது.
ஆனால் அதன் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை!
இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை இன்று (செப்டம்பர் 9) மதியம் எடுத்துக்கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
ஆகையால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர் நீதிமன்றம் தற்போது விசாரிப்பது சரியாக இருக்காது” என்கிற வாதத்தை முன்வைத்தார்.
இதற்கு வேலுமணி தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ, “இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று இந்த வழக்குகளை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ஜெ.பிரகாஷ்